தெற்கு சூடானில் அமைதிப் பேச்சுக்களில் துப்பாக்கிச் சூடு, 37 பேர் உயிரிழப்பு

சனி, பெப்பிரவரி 4, 2012

தெற்கு சூடானில் சென்ற வாரம் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சம்பந்தப்பட்டோருக்கு இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர்.


மூன்று மாநிலங்களின் அதிகாரிகள், மற்றும் ஐக்கிய நாடுகளின் தூதுக்குழு ஆகியோர் யுனிட்டி மாநிலத்தின் மயெண்டிட் நகரில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். சென்ற வாரம் கால்நடை அபகரிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை அடுத்து இப்பேச்சுவார்த்தைகள் ஐநா ஆதரவில் இடம்பெற்றன. பேச்சுவார்த்தைகளின் இடையில் இரு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக ஐநா வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அடுத்து நான்கு வாகனங்களில் அங்கு வந்திறங்கிய ஆயுததாரிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். துப்பாக்கிதாரிகளில் பல தரப்பிலும் இருந்து காவல்துறையினர், இராணுவத்தினரும் அடங்குவர் என ஏஎஃப்பி செய்திநிறுவனம் அறிவித்துள்ளது.


ஐநா அமைதிப்படை உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். கொல்லப்பட்டவர்களில் பொது மக்களும் அடங்குவர். ஆனாலும் காவல்துறையினரே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்.


யுனிட்டி மாநிலம், வராப் மாநிலம் ஆகியவற்றின் காவல்துறையினரிடையே "பிரச்சினை கிளம்பியதால்" வன்முறை வெடித்ததாக தெற்கு சூடானின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மஜாக் டாகூட் தெரிவித்தார்.


கடந்த சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை அடைந்த பின்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மூலம் தொகு