தில்லியில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளான பெண் சிங்கப்பூரில் உயிரிழப்பு

சனி, திசம்பர் 29, 2012

இந்தியத் தலைநகர் தில்லியில் இரு வாரங்களுக்கு முன்னர் பேருந்து ஒன்றில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பயனளிக்காமல் இறந்ததை அடுத்து, தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் பல பகுதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.


மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட இப்பெண் இன்று சனிக்கிழமை சிங்கப்பூரின் மவுன் எலிசபெத் மருத்துவமனையில் உயிரிழந்தார். 23 வயதான இப்பெண்ணின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.


இந்நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளில் காவல்துறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.


வன்புணர்வு தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


உ‌த்தரப்‌பிரதேச மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த ‌23 வயது இயங்குனர் மருத்துவ மாணவி பணியிடைப் பயிற்சிக்காக தில்லி வ‌ந்திருந்தார். 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் ஒரு மணித்தியாலம் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இரும்புக் கம்பிகளால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து தூ‌க்‌கி ‌வீச‌ப்ப‌ட்ட இருவரு‌ம் சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவியின் உடல் நிலை மோசமானதை‌‌த் தொட‌ர்‌ந்து உயர் சிகிச்சைக்காக 26 ஆம் தேதி இரவு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். ஆனாலும் சிகிச்சை அவர் உயிரிழந்தார். இறக்கும் போது அவரது குடும்பத்தினரும் அருகில் இருந்தனர்.


அந்தப் பெண்ணின் பல அவயங்கள் செயலிழந்துவிட்டன என்றும், பெண்ணின் மூளையிலும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரது நுரையீரல் மற்றும் அடிவயிற்றில் கிருமித் தொற்றுக்கள் இருப்பதாகவும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அந்தப் பெண் உயிருக்குப் போராடி வந்ததாகவும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோ தெரிவித்தார்.


மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இப்பெண் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அரசியல் நோக்கம் எதுவும் இருக்கவில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.


மூலம் தொகு