திரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், செப்டெம்பர் 27, 2011

லிபியத் தலைநகர் திரிப்பொலியில் உள்ள அபு சலிம் சிறை வளாகத்தில் பெரும் மனிதப் புதை குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 1200 இற்கும் மேற்பட்ட உடல் எச்சங்கள் மீட்கப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.


அபூ சலிம் சிறைச்சாலைக்கு அண்மையில் உள்ள பாலைவன பகுதியிலேயே இந்த பாரிய மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைகுழியின் மேற்பரப்பில் இருந்து உடல் எச்சங்கள் மற்றும் உடைகளின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


கடந்த 1996, சூன் 28ல், சிறை நிலைமைகள் மிக மோசமாக இருப்பதாகவும், தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கைதிகள் சிறைக் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்றனர். அப்போது ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதிகளைக் கொல்ல அப்போதைய தலைவர் முஅம்மர் கடாபி உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.


இந்நிலையில் கடந்த ஆகத்து 20ம் தேதி அபு சலிம் சிறை வளாகத்தில், முன்பு பணியாற்றிய சிறை அலுவலர்கள் உதவியுடன், கைதிகள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டதாக, லிபியா இடைக்கால கவுன்சில் உறுப்பினர் கமால் அல் ஷரீப் நேற்றுத் தெரிவித்தார்.


இது குறித்து மருத்துவ அதிகாரியான டாக்டர் ஒஸ்மன் அப்துல் ஜலீல் கூறியதாவது, 1,270க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகளை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டெடுக்கப்பட்டவர்களின் உறவினர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம், என்றார்.


மூலம்

தொகு