திபெத்து நிலச்சரிவில் 83 சுரங்கப் பணியாளர்கள் புதையுண்டனர்

சனி, மார்ச்சு 30, 2013

சீனாவின் திபெத்துப் பகுதியில் நேற்றுக்காலை இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து 83 சுரங்கப் பணியாளர்கள் நிலத்தில் புதையுண்டனர்.


பிராந்தியத் தலைநகரான லாசாவில் 4,600 மீட்டர் உயரமான பகுதியில் காலை 06:00 மணிக்கு 3 கிமீ நீளத்தில் இந்நிலச்சரிவு ஏற்பட்டது. காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், மருத்துவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


சம்பவம் நடைபெற்று 36 மணி நேரத்தின் பின்னரே புதையுண்ட ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. என்னும், புதையுண்டவர்களை உயிருடன் மீட்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதையுண்டவர்களில் பெரும்பாலானோர் யுனான், கூசூ, சிச்சுவான் மாகாணங்களைச் சேர்ந்த கான் சீனர்கள் எனவும், இருவர் திபெத்தியர்கள் அனவும் தெரிவிக்கப்படுகிறது.


திபெத்தியப் பீடபூமி செப்பு, ஈயம், நாகம், இரும்பு போன்ற கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும்.


சீனாவில் நேற்று இடம்பெற்ற வேறொரு சம்பவத்தில், சிலின் மாகாணத்தின் வடகிழக்கே பைசான் நகரில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வாயு வெடிப்பு ஒன்றில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.


மூலம் தொகு