சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
திங்கள், செப்டெம்பர் 19, 2011
- இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு இமயமலைப் பகுதியில் தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முழுமையான ஆட்சேதம், பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையே நிலநடுக்கத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இங்கிலாந்து தூதரக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். லக்னோ, பாட்னா, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கேங்டாக் மற்றும் டார்ஜீலிங்கில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சில பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளும் செயலிழ்ந்துள்ளன. மேற்கு வங்கத்திலும் தொலைபேசி இணைப்புகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
மூலம்
- இந்திய - நேபாள எல்லை பூகம்பத்தில் பலர் பலி, பிபிசி, செப்டம்பர் 19, 2011
- வட, கிழக்கு மாநில பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆனது- மீட்புப் பணியில் விமானப்படை, ராணுவம், தட்ஸ்தமிழ் செப்டம்பர் 19, 2011
- சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது, தினமலர், செப்டம்பர் 19, 2011