தாய்லாந்தில் சிவப்புச் சட்டைக்காரர் போராட்டம், 16 பேர் உயிரிழப்பு

சனி, மே 15, 2010

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் வணிக மையப்பகுதியில் இருந்தபடி கடந்த இரண்டு மாத காலமாக அரசுக்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சி ”சிவப்புச் சட்டை” போராட்டக்காரர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்பதற்காக இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக அங்கு நடத்திய இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 பேருக்கு மேல் காயமடைந்தனர்.


காயமடைந்தவர்களில் மூன்று ஆஸ்திரேலியர்களும் அடங்குவர் என ஆத்திரேலியத் தொலைக்காட்சி அறிவித்தது.


அந்தப் பகுதியில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் தொடர்ந்து கேட்டுவருகின்றன. ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினார்கள். இன்று சனிக்கிழமை மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.


செஞ்சட்டைக்காரர்கள் என்று அழைக்கப்படும் போராட்டக்காரர்கள் தங்களை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்தினரை தடுப்பதற்காக வாகனங்களுக்குத் தீவைத்தனர்.


போராட்டக்காரர்களுக்குத் தலைமை வகிக்கும் முன்னாள் ஜெனரல் காட்டியா சவஸ்திப்போல் என்பவர் சென்ற வியாழன் அன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்டுப் படுகாயமடைந்ததை அடுத்து வன்முறை தீவிரமாகியிருந்தது.


செஞ்சட்டைக்காரருடன் எந்த சமரசங்களுக்கும் உடன்படப்போவதில்லை என அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துபவர்களில் சிலர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து ராணுவத்தினர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார்.


போராட்டக்காரர்கள் பிரதமர் அபிசித் வெச்சசிவா நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.


இந்தப் போராட்டக்காரர்கள், நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் தக்சின் செனவத்ரவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடும் கொள்கையற்ற அரசியல் கூட்டாளிகள் என்று அரசாங்கம் கூறுகிறது.


இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கும் மீண்டும் தாய்லாந்தை ஆளவிரும்பும் தக்சினுக்குமான தொடர்புகள் மறுக்க முடியாதது என்றாலும், இந்தப் போராட்டம் என்பது அந்த வட்டத்தை தாண்டி விரிவடைந்து வருவதுபோல் தோன்றுகிறது.


முக்கியமாக, நாட்டின் கிராப்புற மக்கள், அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் விரக்திக்கு இந்த போராட்டம் ஒரு வடிகாலாக மாறிவருகிறது. இவர்களோடு கூட நகர்ப்புற ஏழைகளும் இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள். இடதுசாரி அறிவு ஜீவிகளும், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பகுதியும் கூட இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார்கள்.


சர்ச்சைக்குரிய செல்வந்தச் சீமானான தக்சின் போன்ற ஒருவரை இவர்கள் ஏழை பங்காளன் என்று முன்னிறுத்துவதை அரசாங்கத்தில் இருப்பவர்களால் நம்பமுடியவில்லை.


ஆனால் தக்சினைப் பொறுத்தவரை, அவர் சுயமாக முன்னேறிய ஒருவர். அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க தாய்லாந்துக்காரர் என்றில்லாமல் ஒரு பாதி சீன வம்சாவளியிலிருந்து வரும் ஒரு வெளியாள் என்பதால், அவரோடு ஏழைபாழைகள் தங்களை இணைத்துப் பார்த்துக்கொள்வது எளிதாக இருக்கிறது.


அவர் ஆட்சியில் இருந்தபோது கிராமப்புற ஏழைகள் பயன்பெறத்தக்க வகையில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார். அத்துடன் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்களும், வாகன வசதிகளும் மற்ற பல வசதிகளையும் அவர் கிராமங்களில் அதிகப்படுத்தினார்.


இப்படியான புதிதாக கிடைத்த வசதி வாய்ப்புக்களை அனுபவித்துப் பழகிய கிராமப்புறத்து ஏழைகள், அரசியலில் தங்களுக்கு கிடைத்த புதிய வாய்ப்பை தற்போது பயன்படுத்தி தங்களின் இருப்பை வலியுறுத்துவதன் ஒரு வெளிப்பாடாகவும் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.


செஞ்சட்டைக்காரர்களின் பார்வையில் தற்போதைய தாய்லாந்து ஆட்சி என்பது அந்த நாட்டின் பாரம்பரிய ஆளும் வர்க்கங்களான, பெருந்தனக்காரர்கள், ராணுவம் மற்றும் நீதிபதிகளின் கூட்டணி. அதை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களுக்கு நல்லது என்பது இவர்களின் கருத்து.

மூலம் தொகு