தாய்லாந்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது

செவ்வாய், மே 20, 2014

தாய்லாந்தில் சட்டம் ஒழுங்கைப் பேணும் பொருட்டு அந்நாட்டு இராணுவம் அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனாலும் இது இராணுவப் புரட்சி அல்ல என இராணுவம் கூறியுள்ளது.


அரசியலமைப்புக்கு அமைய இராணுவம் செயல்பட வேண்டும் எனவும், வன்முறையைத் தூண்டக் கூடாது எனவும் தாய்லாந்தின் பதில் பிரதமர் இராணுவத்தினரைக் கேட்டுக் கொண்டார்.


தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்களை இராணுவத்தினர் கைப்பற்றினர். தலைநகர் பாங்கொக்கிற்கான பாதைகளையும் அவர்கள் துண்டித்தனர். தேசியப் பாதுகாப்பைக் கருதி ஊடகத் தணிக்கையும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.


கடந்த பல மாதங்களாக அரசுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கொந்தளிப்பு காணப்படும் நிலையில் இன்றைய அறிவிப்பு வந்துள்ளது. 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 11 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.


அரசும் எதிர்க்கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென இராணுவத் தலைவர் பிராயுத் சான்-ஓச்சா இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளர்.


மூலம் தொகு