தமிழ்நாடு 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை உட்பட அனைத்து 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் 89 நகரசபைகளை அதிமுக கைப்பற்றியது. தி.மு.க. 23 நகரசபைகளையும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தலா 2 நகரசபைகளையும், ம.தி.மு.க. ஒரு நகர சபையையும் கைப்பற்றின. 5 நகரசபைகளின் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
மொத்தம் 529 பேரூராட்சிகளில் 287 பேரூராட்சிகளில் அதிமுக வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு 121 பேரூராட்சிகளும், காங்கிரசுக்கு 23 பேரூராட்சிகளும், பாரதீய ஜனதாவுக்கு 13 பேரூராட்சிகளும், ம.தி.மு.க. வுக்கு 7 பேரூராட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 பேரூராட்சிகளும், தே.மு.தி.க.வுக்கு 3 பேரூராட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா 2 பேரூராட்சிகளும் கிடைத்தன. 65 பேரூராட்சிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இந்தத் தேர்தலில் தே.மு.தி.க. மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டன.
சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியத்தை தோற்கடித்தார். 10 மாநகராட்சிகளில் முதல்வர்களாக வெற்றி பெற்றுள்ளவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு நகராட்சியைக் கூட வெல்லமுடியவில்லை. இன்னும் இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இப்போதைய முடிவுகள் அதற்குப் பெரும் பின்னடைவாகியுள்ளது.
கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த மதிமுகவிற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலகள் சற்று நம்பிக்கை அளிப்பதாயிருக்கிறது. குளித்தலை நகராட்சியை அது கைப்பற்றியிருக்கிறது, தூத்துக்குடியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, மற்றும் சில பேரூராட்சித் தலைவர் பதவிகளையும் அது வென்றிருக்கிறது.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு, அக்டோபர் 19, 2011
- தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு , அக்டோபர் 17, 2011
மூலம்
தொகு- அதிமுக அமோக வெற்றி, தினமணி, அக்டோபர் 22, 2011
- தமிழகத்தில் ஜெயலலிதாவின் அதிமுக அமோகம், பிபிசி, அக்டோபர் 22, 2011