தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு

புதன், அக்டோபர் 19, 2011

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் 1 கோடியே 31 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 402 பதவிகளுக்கு 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 17ம் திகதி 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 19,646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 1,12,697 பதவிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. தமிழகம் முழுவதும் 77.02 சதவீத வாக்குகள் பதிவாயின.


இன்று இரண்டாவது கட்டமாக 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்களிக்க 38 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு (தலா 2) வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு இணையக்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு