தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011: மதிமுக போட்டியிடாது என வைகோ அறிவிப்பு

திங்கள், மார்ச்சு 21, 2011

அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். அத்துடன், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இடம்பெற்று வந்த மதிமுக, அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


243 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் 30 இடங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், 12 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதால் கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறியுள்ளார்.


தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் தமிழக, புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல. இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல,  சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை. பெரியாரும், அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மதிமுக, 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மதிமுக எடுத்த முடிவை அக்கட்சியினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. கே. ரங்கராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதே வேளையில், அதிமுகவுக்கும் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்குமிடையில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 41 தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


மூலம் தொகு