தஜிக்கித்தானில் மிதமான நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், மே 14, 2012

மத்திய ஆசிய நாடான தஜிக்கித்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்ற 5.7 அளவு நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்தார். பல கட்டடங்கள் சேதமடைந்தன.


கார்ம் மாவட்டத்திலேயே பெரும் சேதம் ஏற்பட்டது. இரண்டு கட்டடங்கள் முழுமையாக இடிந்து வீழ்ந்தன. மேலும் பல சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாடுகளும், ஆடுகளும் உயிருடன் புதையுண்டன.


நிலநடுக்க அளவு திறந்த உந்தத்திறன் ஒப்பளவு என்ற அளவீட்டு முறையில் அளக்கப்பட்டுள்ளது. இவ்வளவீட்டு முறையே தற்போது அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மிதமான, மற்றும் உயர் நிலநடுக்கங்களை அளக்கப் பயன்படுத்தி வருகிறது. நில அதிர்வு உந்தத்திறன் புவியின் இறுக்கத்தினை சராசரி பாறையடர்த்தி இடைவெளியில் நகர்ந்த புவிப்பரப்பு, மற்றும் மொத்த ஆற்றல் வெளிப்பாடு போன்ற காரணிகளைக் கொண்டு அளவிடப்படுகிறது.


குலோப் நகரில் இருந்து 100 கிமீ வடக்கே 10 கிமீ ஆழத்தில் அதிகாலை 4:28 மணிக்கு நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தாக்கம் 140 கிமீ தூரத்தில் உள்ள தலைநகர் துசான்பேயில் 4.0 அளவில் உணரப்பட்டது.


முன்னாள் சோவியத் நாடான தஜிக்கித்தானின் பெரும்பாலான பகுதிகள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. இங்கு நிலநடுக்கங்கள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் இடம்பெற்று வருகின்றன.


மூலம்

தொகு