டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

This is the stable version, checked on 15 செப்டெம்பர் 2010. Template changes await review.

செப்டம்பர் 2, 2010

ஐக்கிய அமெரிக்காவில் "டிஸ்கவரி சானல்" தலைமையகத்தில் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பணயக் கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


மேரிலாந்தில் உள்ள டிஸ்கவரி தலைமையகம்

மேரிலாந்தில் உள்ள தலைமையகக் கட்டிடத்தினுள் கைத்துப்பாக்கியுடனும், வெடிபொருட்களை உடலில் கட்டியவண்ணமும் நேற்று பிற்பகல் அந்த நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.


பாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்நபர் வெடிபொருட்களை வெடிக்க வைக்க இருந்த நேரத்திலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஜேம்ஸ் ஜேய் லீ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதுடையவர். இவர் கட்டிடத்துக்கு வெளியே பல தடவைகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கலிபோர்னியாவின் சான் டியேகோவைச் சேர்ந்த ஜேம் லீ 2008 ஆம் ஆண்டில் டிஸ்கவரி தலைமையகத்தின் முன்னால் அந்நிறுவனத்துக்கு எதிராகக் கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுக்களை வீசி எறிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் என த கசெட் என்ற உள்ளூர்ப் பத்திரிகை தெரிவித்துள்ளது. புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி நிறுவனம் முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு ஆகும்.


savetheplanetprotest.com என்ற இணையத்தளத்தையும் அவர் பராமரித்து வந்தார். புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி சானல் உதவ வேண்டும் என அவ்விணையத்தளத்தின் மூலம் கோரி வந்தார்.


இம்மனிதரைத் தாம் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் ஆனால் “அவரது கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,” என டிஸ்கவரி பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


டிஸ்கவரி சானல் உலகம் முழுவதிலும் சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

மூலம்