ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது
வெள்ளி, அக்டோபர் 21, 2011
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை, பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஐந்தரை மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக 1384 கேள்விகள் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் 379 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவிடம் விசாரணை இன்றும் தொடரும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1991-1996-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313-ன்கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக நேற்று வியாழனன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட அவர், காலை பத்தரை மணியளவில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதா வருகையை ஒட்டி, விமான நிலையத்தில் இருந்து நீதிமன்றம் வரை கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
வழக்கில் தொடர்புடையவர்கள் தவிர, நீதிமன்றத்துக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. நீதிபதியின் உத்தரவின்பேரில், பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் வந்திருந்தனர்.
359 சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் சாராம்சத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கேள்விகளை நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா முன்னிலையில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவிடம் கேட்கத் தொடங்கினார். கொடநாடு மாளிகை, திருநெல்வேலியில் விவசாய நிலம் வாங்கியது, போயஸ் தோட்டம் புதுப்பிக்கப்பட்டது, பங்குகளை வாங்கியது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 1005 கேள்விகள் ஜெயலலிதாவிடம் இன்று கேட்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- ஜெயலலிதாவிடம் நீதிமன்றவிசாரணை தொடர்கிறது, பிபிசி, அக்டோபர் 20, 2011
- பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர்: இன்றும் விசாரணை, தினமணி, அக்டோபர் 21, 2011
- பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜெ.,, தினமலர், அக்டோபர் 20, 2011
- பெங்களூர் கோர்ட்டில் ஆஜரானார் ஜெயலலிதா : 379 கேள்விகளுக்கு பதிலளித்தார் !, தினகரன், அக்டோபர் 21, 2011