சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், அக்டோபர் 20, 2011

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சமூகமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காரணம் கூறி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தாமதப்படுத்துவது சரியல்ல எனத் தெரிவித்ததுடன் இன்று திட்டமிட்டபடி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமையே இதற்குக் காரணம்.


நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகத்தின் தரப்பில் தலைமைச் செயலர் மற்றும் காவல் துறைத் தலைவர் ஆகியோரது கருத்துக்களுடன் புதிய மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க, விமான நிலையத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் வரை முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உறுதியளிக்கப்பட்டது. கர்நாடக அரசு இவ்வாறு உறுதியளித்திருக்கும் நிலையில், அந்தப் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்புவது நியாயம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களால், சிறப்பு நீதிமன்றம், அக்ரஹாரத்தில் மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கர்நாடகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா முதலில் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதையடுத்து, உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றமும் அதை ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் யோசனைப்படி, அக்டோபர் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.


மூலம்

தொகு