சோசலிசத்தை நோக்கிய பாதையில் வெனிசுவேலாவில் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்தது

ஞாயிறு, மே 12, 2013

வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைப்பு உத்தரவாதம், நீண்ட மகப்பேறு விடுப்பு உத்தரவாதம், அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.


இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா "முதலாளித்துவத்திற்கு மாற்று, சோசலிசமே" என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் படிப்படியாக சோசலிச பாதையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் விளைவாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டம் [1] என்ற அடிப்படையில் தொழிலாளர்களின் நாட்டில் உள்ள செல்வத்தின் பயனை தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் விதத்தில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் உலகின் மிக முன்னேறிய தொழிலாளர் சட்டம் ஆகும். வெனிசுலாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரத்தில் 40 மணி நேரம் மட்டுமே வேலை. 44 மணி நேரம் என்பது இனி கிடையாது.


அதே போல் வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிலாளி பணிபுரிந்திருந்தாலே ஒரு நாள் வார விடுப்பு வழங்க வேண்டும். மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 6 வாரம் விடுப்பும், பிரசவத்திற்கு பின்பு 20 வாரமும் விடுப்பு அளிக்கப்படும். அதே போல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வார விடுப்பும் அளிக்கப்படும். இதே விடுப்புக்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையை தத்தெடுக்கும் குடும்பத்தின் தம்பதிகளுக்கும் வழங்கப்படும். இந்த சட்டம் அமலாவது மூலம் பிரசவத்திற்கு அதிக விடுப்பு வழங்கும் நாடுகளில் மூன்றாவது நாடாக வெனிசுலா திகழும். அதே போல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அது சுய தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் குடும்ப பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்கு முன்பு நீண்ட விவாதம் நடைபெற்றிருந்தாலும், இந்தாண்டில் ஆரம்பத்தில் இந்த சட்டத்திருத்தத்தில் மாறுதல் செய்ய வேண்டி தொழிலாளர்களும், மற்றவர்களும் விரும்பினால் மே 7ம் தேதிக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த சட்டம் இந்த வாரம் முதல் அமாலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அடுத்து வரும் 6 வாரங்கள் தொடர்ந்து வேலையிடங்களில் சட்ட அமலாக்கத்திற்கும் ஏதார்த்ததிற்கும் உள்ள நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த சட்டப்படி எந்த தொழிலாளரையும் இணைக்காமல் இருந்தால் ஆலைகளுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும். தொழிலாளர்களும் தங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்திட வேண்டும். தேவைப்பட்டால் தொழிலாளர் துறையிடம் இது குறித்த தகவலை தெரிவிக்கலாம் என்று வெனிசுவேலாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மரியா இக்லேசியாசு தெரிவித்துள்ளார்.


இந்தச் சட்டம் அமலாவது என்பது முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசபாதையின் வராலாற்று முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்த அரசு குறித்து தொழிலாளர்களிடம் பரப்பப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது பதினான்கு ஆண்டுகால முயற்சியின் வெற்றியாகும் என தேசிய பொதுத்துறை ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பிராங்கிளின் ரோன்டன் தெரிவித்துள்ளார்.


வெனிசுவேலா மக்களின் மகத்தான தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவருமான மறைந்த ஊகோ சாவேசு நாடாளுமன்றத்தில் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சட்டத்திற்கு அங்கீகாராம் அளித்து அமலாக்குவதற்கு அனுமதி வழங்கினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், 200 ஆண்டுகளுக்கு மேலான இந்த குடியரசு வராலாற்றில் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் நியாயமான தொழிலாளர் சட்டம் இருந்ததில்லை. அதனையெல்லாம் இந்த ஒரு சட்டம் முறியடித்து தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பதை தொழிலாளர் துறை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.


மூலம் தொகு