சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு - சசிகலா சாட்சியம்

ஞாயிறு, பெப்பிரவரி 19, 2012

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை, எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு என்று சசிகலா கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி, மேற்படி கூறியுள்ளதுடன் கண்ணீர் விட்டும் அழுதுள்ளார். அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி, மற்றும் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரின் சாட்சியங்களை பதிவு செய்யும் படலம் துவங்கியிருக்கிறது.


பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் சமூகமளித்த சசிகலாவிடம், நேற்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களை முழுமையாக நிர்வகித்து வந்ததாகவும், ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக மட்டுமே இருந்தார், அலுவலகப் பணிகளில் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை’ என்றும், வங்கிக் கணக்கைத் தான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்றும் சசிகலா கூறியுள்ளார்.


1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா.


இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக தயார் செய்யப்பட்டிருந்த 1,339 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.


மூலம் தொகு

 

பகுப்பு:சட்டமும் ஒழுங்கும்]]