சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழ் வானொலி பற்றிய பயிலரங்கு

வெள்ளி, பெப்பிரவரி 21, 2014

சென்னைப் பல்கலைக்கழக மணிக்கூண்டு கோபுர கட்டடத் தொகுதியிலுள்ள ஆய்வரங்கு கூடத்தில் பன்நாட்டுத் தமிழ் வானொலி ஒலிபரப்புகள் பற்றிய பயிலரங்கு நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது.


பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்புத் துறையால் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்குக்கு துறைத் தலைவர் இரவீந்திரன் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் வானொலி ஒலிபரப்புகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கியதோடு துறையின் தொகுப்பிலிருந்து முன்னாள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் கே. எஸ். ராஜா, எஸ். பி. மயில்வாகனன் ஆகியோரின் குரல் ஒலிக்கீற்றுகளையும் மாணவர்கள் கேட்கக் கூடியவாறு ஒலிக்கச் செய்தார்.


துறைத்தலைவருடன் விருந்தினர்

சிறப்பு விருந்தினர்களாக பிபிசி தமிழோசை ஒலிபரப்பின் சம்பத்குமார், அனைத்துலக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரி (Zhou Xin), மலேசிய வானொலி மின்னல் எப். எம். ஐச் சேர்ந்த செல்வி பொன் கோகிலம், இலங்கை வானொலி தமிழ் சேவை முன்னாள் அறிவிப்பாளர் அப்துல் ஜபார், மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்புத் துறை பேராசிரியர் ஜெய்சக்திவேல், சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலைவர் திருமதி பிரமீளா குருமூர்த்தி, வானொலி ஆர்வலர்கள் கே. ராஜா, எஸ். எஸ். உமாகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு விருந்தினர்

உள்நாட்டு வானொலிகளை விட தமிழோசை போன்ற வெளிநாட்டு ஒலிபரப்புகளை மக்கள் ஏன் விரும்பிக் கேட்கிறார்கள் என சம்பத்குமார் காரணங்களுடன் விளக்கிக் கூறினார். ஒலிபரப்புத் துறை தொடர்பில் தனது சொந்த அநுபவங்கள் சிலவற்றையும் எடுத்துச் சொன்னார். அப்போது தமிழோசை ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதற்கு அந்தப் பெயரைச் சூட்டியவர் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளராக இருந்த சோ. சிவபாதசுந்தரம் அவர்களே என பி.பி.சி.யின் ஆவணம் ஒன்றை பிரமீளா குருமூர்த்தி படித்துக் காண்பித்தார். இவர் சிவபாதசுந்தரத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்துல் ஜபார் தான் 1950களில் இலங்கை வானொலியில் பணியாற்றிய போது அங்கு பணியாற்றிய ஏனைய சில ஒலிபரப்புத் துறை ஜாம்பவான்களான சானா என்ற சண்முகநாதன், விவியன் நமசிவாயம், கே. எஸ். நடராஜா, குஞ்சிதபாதம் மற்றும் பலரை நினைவு கூர்ந்தார். தற்போது வெளிநாடுகளில் இயங்கும் பல வானொலி நிலையங்களுக்கு பங்களிப்பு செய்வது பற்றி சொன்னதுடன் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் பற்றியும் விபரித்தார்.


திருமதி ஈஸ்வரி தூய தமிழில் உரையாற்றினார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் 16 பேர் பணியாற்றுவதாகவும் அவர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள் என்றும் கூறினார். ஒலிபரப்பில் வேற்று மொழி கலக்காத தமிழ் பேசப்படுவதாகக் கூறிய அவர், தொடக்கத்தில் தாங்கள் எழுத்துத் தமிழையே பேசி வந்ததாகவும் பேச்சுத் தமிழ் பழகுவதற்காக இங்கு வந்ததாகவும் குறிப்பிட்டார். மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் பேசப்படும் தமிழ் பற்றிக் குறிப்பிட்ட அவர் சீனத் தமிழ் ஒலிபரப்பை வானொலிப்பெட்டியின் சிற்றலையில் கேட்க முடியாதவர்கள் இணையத்தில் http://tamil.cri.cn/ என்ற தளத்தில் கேட்கலாம் என அறியத் தந்தார்.


உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் பண்பலை ஒலிபரப்பு எனக் கூறப்படும் மலேசியா மின்னல் எப். எம். ஐச் சேர்ந்த செல்வி பொன் கோகிலம் அது ஒரு அரச நிறுவனம் என்றும் அதன் தமிழ் ஒலிபரப்பில் வேற்று மொழிச் சொற்கள் ஒன்று கூட இடம்பெறக் கூடாதென கண்டிப்பான உத்தரவு உள்ளது எனக் கூறினார். பொதுவாக ஒலிவாங்கியின் முன்னால் அமர்ந்திருக்கும் அறிவிப்பாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களையும் அவற்றை வெற்றிகரமாக கையாள்வது எப்படி என்பதையும் சில உதாரணங்களோடு எடுத்துக் கூறினார்.


டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (DRM) என்ற புதிய வானொலி ஒலிபரப்பு முறை பற்றி ஜெய்சக்திவேல் விளக்கிக் கூறினார். இந்த ஒலிபரப்பு முறையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் (Script) வானொலிப் பெட்டியில் காட்சியாகப் பார்க்க முடியும் எனவும் சென்னை வானொலி நிலையம் இந்த முறையில் ஒலிபரப்பு செய்வதாகவும் ஆனால் தமிழ் நாட்டில் தற்போது இந்த முறையில் இயங்கும் இரண்டு வானொலி பெட்டிகளே உள்ளன என்றும் கூறினார்.


ஈற்றில் மாணவர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறையில் அநுபவம் பெற்றவர்கள் பதில் அளித்தார்கள்.