சூழல் மாசடைதலைத் தடுக்க கரிம உமிழ்வுக்கு வரி அறவிட ஆத்திரேலியா திட்டம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூலை 10, 2011

மோசமாக சூழலை மாசுபடுத்துவோர் மீது கரிம உமிழ்வு வரியை அறவிட ஆத்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த முடிவை இன்று ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்தார்.


2020 ஆம் ஆண்டுக்குள் கரிம மாசை 159 மில்லியன் தொன்களாகக் குறைக்க ஆத்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சூலை மாதத்தில் இருந்து தொன் ஒன்றுக்கு 23 ஆஸ்திரேலிய டாலர்கள் (£15) வீதம் அறவிடப்படவுள்ளது. மிக மோசமாக கரிம உமிழ்வுகளை வெளியிடும் 500 நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.


உலகில் மிக மோசமாக ஆள் ஒன்றுக்கு பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்றாகும். ஆத்திரேலியா தனக்குத் தேவையான 80 விழுக்காடு மின்சாரத்துக்கு நிலக்கரியையே நம்பியுள்ளது. அத்துடன் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இது முன்னணியில் உள்ளது.


பல தொழில் நிறுவனங்கள், மற்றும் எதிர்க்கட்சிகள் கரிவ வரிக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொருளாதாரப் போட்டித்தன்மையை இந்த வரித்திட்டம் பாதிக்கும் என விமரிசகர்கள் தெரிவித்துள்ளனர்.


மின்சாரச் செலவு அதிகரிப்பை ஈடு கட்டுவதற்காக கரிம வரியின் மூலம் பெறப்படும் நிதியின் ஒரு பகுதியை குடியிருப்பாளர்களுக்கு மீள அளிக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொது மக்களின் எதிர்ப்பைக் குறைக்கலாம் என அரசு எண்ணியுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர மட்டத்தினருக்கு வரிக் குறைப்பு, மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்க்கு மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றைக் கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் 90 விழுக்காடு ஆத்திரேலியக் குடியிருப்பாளர்கள் பயனடைவர் என அரசு கூறியுள்ளது.


குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பெட்ரோலியப் பொருட்களுக்கு கரிம வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டுக்குள் கரிம மாசை 159 மில்லியன் தொன்களாகக் குறைக்க ஆத்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2000 ஆம் ஆண்டு நிலையை விட 5% குறைவானதாகும்.


கரிம வரி என்பது கரிவாயு, மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்குரிய வரியாகும். புவி சூடாதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதாக கருதப்படுவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதை தடுக்கும் வண்ணம் இந்த வரிகள் அறிவிடப்படுகின்றன. இந்த வரிகள் மேற்குநாடுகளில் பரவலாக அறிவிடப்பட தொடங்கி உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர தற்போது நியூசிலாந்து நாடு கரிம வரியை அறவிடுகிறது.


ஜூலியா கிலார்ட் தலைமையிலான தொழிற்கட்சிக் கூட்டணி ஒரே ஒரு பெரும்பான்மை இடத்தையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது.


மூலம்

தொகு