சுவிஸ் வங்கி விவரங்களை விக்கிலீக்ஸ் பெற்றுக் கொண்டது

செவ்வாய், சனவரி 18, 2011

சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் அவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த பிரபலமான 2,000 பேர்களின் கணக்கு விபரங்களை ஆவணக்கசிவு இணையத்த விக்கிலீக்சின் நிறுவனர் ஜூலியன் அசான்ச்சிடம் நேற்றுக் கையளித்தார்.


இரண்டு குறுந்தட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட விபரங்களை ருடோல்ஃப் எல்மர் என்ற அந்த நபர் லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து அசான்ச்சிடம் கையளித்தார். அவற்றைத் தாம் முழுமையாக ஆராய்ந்த பின்னர் வெளியிடவிருப்பதாக அசான்ச் தெரிவித்தார்.


ஜூலியசு பாயெர் என்ற சுவிஸ் வங்கியின் கேமன் தீவுக் கிளையின் தலைவராக எல்மர் இருந்திருக்கிறார். முன்னர் இவர் வங்கி இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டில் இவரை அவ்வங்கி பணியில் இருந்து நீக்கியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நாளை புதன்கிழமை எல்மர் சுவிட்சர்லாந்து செல்லவிருக்கிறார்.


ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலரின் 1990 - 2009 காலப்பகுதில் இருந்த சுவிஸ் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள் நேற்றுத் தரப்பட்டன. "முக்கியமாக வங்கிகளைப் பற்றியும் வங்கிச் செயற்பாடுகள் பற்றியும் விபரங்கள் உள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள், கறுப்புப் பணப் புழக்கம், ஊழல் ஆகியவற்றால் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் போன்ற விபரங்கள்” தரப்பட்டுள்ளதாக எல்மரின் வழக்கறிஞர் கூறினார்.


இன்னும் இரு வாரங்களுக்குள் இது குறித்த தகவல்கள் விக்கிலீக்சில் வெளியிடப்படும் என அசான்ச் தெரிவித்தார்.


இதற்கிடையில், செருமனியின் ஓ.எஹ்.பி என்ற முன்னணி விண்வெளித்திட்டக் கம்பனியின் உயர் பணிப்பாளர் பெரி ஸ்மட்னி என்பவர் விக்கிலீக்சில் வெளிவந்த செய்தி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். "ஐரோப்பாவின் கலிலியோ செய்மதி-புவியிடம்காட்டி திட்டம் முட்டாள்தனமானது," என அவர் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஒருவரிடம் தெரிவித்ததாக விக்கிலீக்சில் தகவல் வந்ததை அடுத்தே இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.


மூலம் தொகு