சுவாசிலாந்தில் கட்சிகள் பங்குபற்றாத நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்
வெள்ளி, செப்டெம்பர் 20, 2013
- 20 செப்டெம்பர் 2013: சுவாசிலாந்தில் கட்சிகள் பங்குபற்றாத நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்
- 16 சூன் 2012: சுவாசிலாந்தில் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகப் பலர் கைது
தெற்கு ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தில் புதிய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நிறைவேற்றதிகாரம் கொண்ட மன்னராட்சி நிலவும் சுவாசிலாந்தில் கட்சிகள் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னர் மூன்றாம் முசுவாத்திக்கு விசுவாசடமான அதிகாரிகளால் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1970களில் இருந்து சுவாசிலாந்தில் அரசியல் கட்சிகள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. தடை செய்யப்பட்ட அரசியல் குழுக்கள் பெரும்பாலும் தென்னாப்பிரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றன. இவை தேர்தலைப் புறக்கணிக்கும் படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியமும், தென்னாப்பிரிக்கக் குழுக்கள் சிலவும் கண்காணிப்பாளர்களை அங்கு அனுப்பியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள தேர்தல் முறை "மன்னராட்சிக்குள் மக்களாட்சி" என மன்னர் முசுவாத்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆப்பிரிக்காவின் கடைசி அதிகாரபூர்வ மன்னராகத் திகழும் முசுவாத்தி 55 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தை எந்நேரமும் கலைக்க அவருக்கு அதிகாரங்கள் உள்ளன. 1800களில் இருந்து சுவாசிலாந்தில் மன்னராட்சி உள்ளது.
45 வயதாகும் மன்னர் முசுவாத்தி தனது 15வது மனைவியாக 18 வயது அழகுராணி ஒருவரைத் திருமணம் புரியவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
மூலம்
தொகு- Swaziland votes in no-party election, பிபிசி, செப்டம்பர் 20, 2013
- Swaziland votes in 'monarchical democracy', அல்ஜசீரா, செப்டம்பர் 20, 2013