சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, செப்தெம்பர் 25, 2011

நேபாளத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயனம் செய்த 19 பேரும் கொல்லப்பட்டனர்.


16 சுற்றுலாப் பயணிகளுடன் எவரெஸ்ட் மலையைக் காணச் சென்று திரும்பும் வழியிலேயே அவர்கள் பயணம் செய்த புத்தா என்ற விமானம் தலைநகர் கத்மண்டு அருகில் வீழ்ந்தது. இந்தத் தனியார் விமானம் இன்று காலை உள்ளூர் நேரம் 07:31 மணிக்கு தரைக்கட்டுப்பாட்டை இழந்தது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டாராயினும், அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


விமானத்தில் 10 இந்தியர்கள், இரண்டு அமெரிக்கர், ஒரு சப்பானியர், ஆறு நேபாளிகள் பயணம் செய்ததாக சுற்றுலாத்துறை செயலர் கணேசராஜ் ஜோசி தெரிவித்தார். இவர்களில் மூன்று விமானிகளும் அடங்குவர். விபத்துக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.


புசான்குநாராயண் என்ற கிராமத்தில் வீட்டுக் கூரை ஒன்றுடன் விமானம் மோதியதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.


கடந்த திசம்பரில், கத்மண்டுவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்திருந்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர். அதர்கு முன்னதாக 2010 ஆகத்து மாதத்தில் இமயமலைப் பகுதியில் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு அமெரிக்கர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு