சீனா குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 9 அக்டோபர் 2010. Template changes await review.

வியாழன், ஆகத்து 19, 2010


சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.


அக்சு என்ற நகரில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் வெடிபொருட்களுடன் மக்கள் கூட்டமாக நின்ற பகுதி ஒன்றுக்கு வந்த உய்கூர் இனத்தவர் ஒருவரே குண்டை வெடிக்க வைத்ததாக உள்ளூர் அரசுப் பேச்சாளர் ஹூ அன்மின் என்பவர் தெரிவித்தார்.


அம்மனிதன் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.


சின்சியாங் மாகாணத்தில் கடந்த ஆண்டு முஸ்லிம் உய்கூர் இனத்தவர்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடயே இனவன்முறை வெடித்ததில் பலர் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் இப்பகுதியில் பின்னர் பல குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு உய்கூர் இனத் தீவிரவாதிகளே பொறுப்பு என அரசு குற்றம் சாட்டியுள்ளது.


சூலை 2009 இல் உருமுச்சி பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 200 பேர் வரையில் இறந்ததை அடுத்து மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் உள்ள சின்சியாங் மாகாணத்தில் சீனா தனது படைகளைக் குவித்துள்ளது.


சீன அரசு சுமார் 1000 பேர் வரையில் கைது செய்து காவலில் வைத்துள்ளது என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்