சீனாவின் சின்சியாங்கில் கலவரம் நீடிக்கிறது

புதன், சூலை 8, 2009

சீனாவின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சின்சியாங்க் பிராந்தியத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156-ஆக உயர்ந்துள்ளது. அந்தக் கலவரத்தில் 1,000 பேர் வரை காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டது.

சின்சியாங் தலைநகரான உரம்கியில் ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை இனக் கலவரம் மூண்டது. உள்ளூர் உய்குரி பழங்குடி இனத்தவர்களுக்கும் ஹான் சீன சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் இப்போது உரம்கி நகருக்கு அப்பாலும் பரவத் தொடங்கியிருப்பதாக சீனத் தகவல்கள் கூறின.

இனக் குழுக்களுக்கு இடையிலும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரம்கி நகரில் நேற்று ஹான் சீன சமூகத்தினர் கைகளில் ஆயுதங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். உய்குர் பழங்குடியினரின் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊர்வலத்தை நடத்துவதாக சீனர்கள் கூறினர்.

கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக உரம்கி நகரில் நேற்று புதிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வயதான பெண்களும் சிறார்களுமாக 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட தங்கள் உறவினர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தின் தொடர்பில் 1434 பேரை போலிசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் நடந்தததாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உய்குர் இனத்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சின்ஜியாங்கில் மற்ற இடங்களிலும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் அதனைத் தடுப்பதற்காக ஆயுதம் ஏந்திய போலிசார் தெருக்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

குவான்டோங் மாகாணத்திலிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றில் உய்கர் மற்றும் ஹான் சீனர்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இவ் வன்முறைச் சம்பவங்கள் தீவிரம் அடைந்தன. சின்சியாங் பகுதியில் கடந்த சில வருடங்களில் குடியேறிய ஹான் சீன சமூகத்ததுக்கு எதிராக, அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தவர்களான உய்குர் பழங்குடியினர் வன்முறை செயல்களைத் தூண்டியதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் அந்தப் பகுதியில் ஹான் சீன சமூகத்தின் அதிகாரத்தால் ஏற்பட்ட விரக்தியே இந்தக் கலவரங்களுக்குக் காரணம் என்று உய்குர் பழங்குடியினர் கூறுகின்றனர்.

மூலம்

தொகு