சிரிய அரசுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம்

ஞாயிறு, பெப்பிரவரி 19, 2012

சிரியாவில் தொடரும் வன்முறைகளை அந்நாட்டு அரசு உடன் நிறுத்த வேண்டும் என்றும் குறித்த வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக அதிக பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துள்ளன.


அரபு நாடுகளான கட்டார், சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாடுகள் கொண்டுவந்த இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு 193 நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் 137 நாடுகள் ஆதரவளித்துள்ளன. சீனா, உருசியா, ஈரான், உட்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டன.


ஐ.நா. கண்டனத் தீர்மானத்தின் மூலம் சிரிய அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனினும் அரசின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவுக்கான ஐ.நா தூதுவர் சுசான் ரைஸ், இது சிரிய மக்களுக்கு உலகின் ஆதரவை வெளிக்காட்டுகிறது என்று கூறினார்.


எனினும் இந்த கண்டன தீர்மானத்தின் ஊடாக தீவிரவாதிகளுக்கு வாய்ப்பு ஏற்படுவதோடு இதனால் மேலும் வன்முறைகள் அதிகரிக்கும் என சிரிய அரசு எச்சரித்துள்ளது. சிரியாவுக்கான ஐ.நா. தூதுவர் பஷர் ஜபாரி பொதுச் சபையில் கூறும்போது, இந்த வாக்கெடுப்பானது டமஸ்கசிற்கு எதிராக தீவிரவாதிகள் மற்றும் கடும் போக்காளர்களுக்கு மோதலை அறிவிகக நல்ல செய்தியை வழங்குகிறது. இந்த தீர்மானம் மேலும் வன்முறைகளை அதிகரிக்கவே உதவுகிறது என்றார்.


இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சிரிய அரசு தனது சொந்த மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டார். அத்துடன் பாதுகாப்புச் சபையில் சிரியா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ பயன்படுத்தப்பட்டது மன்னிக்க முடியாது என கூறிய பான் கி மூன் அதுவே மக்கள் மீதான தாக்குதலுக்கு அனுமதி வழங்குவதாக அமையாது என சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அரச எதிர்ப்பாளர்கள் ஆதிக்கத்திலுள்ள பகுதிகளில் சிரிய அரசு தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. சிரியாவின் ஓம்சு நகரின் பல பகுதிகளில், ராக்கெட் தாக்குதல் நடந்து வருவதாக, அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இதே நேரம் சீனாவின் வெளியுறவு துணை மந்திரி சியாய் ஜுன் நேற்று முன்தினம் அவசரமாக சிரியா சென்றார். தலைநகர் டமாஸ்கசுக்கு சென்ற அவர் சிரிய வெளியுறவு மந்திரியை சந்தித்தார். இதனை அடுத்து நேற்று அதிபர் ஆசாத் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.


மூலம் தொகு