சிட்னியில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் கூரை மீதேறிப் போராட்டம்

செவ்வாய், செப்டெம்பர் 21, 2010

சிட்னியில் உள்ள விலவூட் தடுப்பு முகாமில் ஒன்பது அகதிகள் அம்முகாமின் கூரை மீதேறி இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தமிழர்களான இவர்கள் தாம் நாடு கடத்தப்படும் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படாவிட்டால் கூரையில் இருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகக் கூறியுள்ளனர்.


இப்போராட்டத்தை நேற்று முன் தினம் ஆரம்பித்த பிஜி நாட்டைச் சேர்ந்த 36 வயதுள்ள ஜொசெபா ராவுலினி என்பவர் நேற்று திங்கள் அன்று கூரையில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் நாடு கடத்தப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக தற்கொலை செய்து கொண்டதாக அகதிகளுக்கான வழக்கறிஞர் தெரிவித்தார். இவர் ஆகஸ்ட் 17 ஆம் நாளில் இருந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே இறக்க விலவூட் தடுப்பு முகாம் அதிகாரிகள் நேற்றிரவு முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், "நாங்கள் எல்லோரும் உண்மையான அகதிகள். பாதுகாப்புத் தேடியே ஆத்திரேலியா வந்துள்ளோம் - சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட நாங்கள் இங்கு வரவில்லை,” எனத் தெரிவித்துள்ளனர்.


”போராட்டத்தில் ஈடுபடுவோரில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தினால் அகதி அந்தஸ்து பெற்றவர்,” என இலங்கை அகதிகளுக்கான வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சேரா நாதன் தெரிவித்தார்.


போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஈராக்கியரும், ஈரானியரும் இன்று செவ்வாய்க்கிழமை தமது போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர்.


”போராட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இருக்காது,” என ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இவ்வாண்டு மட்டும் ஏறத்தாழ 4,000 அகதிகள் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆத்திரேலியாவினுள் படகுகள் மூலம் வந்துள்ளனர்.

மூலம்