சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்க மன்னர் முடிவு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், செப்டெம்பர் 26, 2011

சவுதி அரேபியாவில் உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை வழங்கப்படவிருப்பதாக அந்நாட்டின் மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டின் ஷூரா மன்றம் எனப்படும் ஆலோசனை சபையிலும் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா

அடுத்த வியாழன் அன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அவற்றை அடுத்தே இம்மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். உள்ளூராட்சிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே தேர்தல்கள் நடைபெறுகின்றன.


ஷூரா மன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மன்னர் இம்முடிவுகளை அறிவித்தார். மன்னருக்கு ஆலோசனை வழங்கும் ஷூரா மன்றத்துக்கு மன்னரே உறுப்பினர்களை நியமிக்கிறார்.


"இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதனை நாங்கள் தடுக்க மாட்டோம், பெண்களை ஒதுக்கிவைக்க மாட்டோம் என்றும், மூத்த மதகுருக்களிடமும், மற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்து அடுத்த தடவையிலிருந்து பெண்களையும் ஷூரா மன்றத்தில் உறுப்பினராக்குவது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்," என்று மன்னர் தனது உரையில் தெரிவித்தார்.


மிகக் கடுமையான சுணி இசுலாமியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்க மன்னர் எடுத்த முடிவுகளை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது, ஆண் துணையின்றி வெளிநாடு செல்ல முடியாது என்பது போன்ற தடைகள் நடைமுறையில் உள்ளன.


"கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்," என சவுதி எழுத்தாளர் நீமா இசுமாயில் நவாப் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சவுதி அரேபியாவில் உள்ளூராட்சித் தேர்தல்களே ஒரே ஒரு பொது மக்கள் வாக்களிக்கும் தேர்தல் ஆகும். வியாழன் அன்று இடம்பெறும் தேர்தல்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் போட்டியிடுகின்றனர்.


மூலம்

தொகு