சவுதியில் எட்டு வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

திங்கள், அக்டோபர் 10, 2011

சவுதி அரேபியாவில் எட்டு வங்காளதேச நபர்களுக்குப் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


தலைநகர் ரியாதில் கடந்த வெள்ளி அன்று இந்தத் தொழிலாளர்கள் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். 2007 ஆம் ஆண்டில் எகிப்தியரான பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் மூன்று வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வேறு கொலைக்குற்றம் தொடர்பாக மேலும் 5 வங்காளதேசத் தொழிலாளர்கள் மரணதண்டனையை எதிர் நோக்கியுள்ளனர்.


வங்காளதேசத் தொழிலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டதற்கு மனிதநேயத்தைப் பேணும் எவரும் கண்டிக்க வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் கோரியுள்ளன.


சவுதி சட்டப்படி இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், பொது மக்கள் முன்னிலையில் இவ்வாறு நிறைவேற்றுவது வங்காளதேசத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்குப் பெரிதும் மன அழுத்தத்தையும் வேதனையையும் அளிக்கும் என வங்காலதேசத்தின் மனித உரிமை பேணும் ஐன் ஒ'சாலிசு கெண்ட்ரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


பொதுவாக வெளிநாட்டு வேலையாட்கள் அரபி மொழியில் உள்ள சவுதி சட்டங்களைத் தெளிவாக விளங்கிக்கொள்வதில்லை, மற்றும் தமக்காக வாதாடுவதற்காக வழக்கறிஞர்களை அவர்கள் பெறுவது அரிது என அக்குழு தெரிவித்துள்ளது.


ரமழான் பண்டிகை முடிந்த பின்னர் சவுதி அரேலியாவில் மரணதண்டனைகள் பெருமளவு நிறைவேற்றப்படுவதாக பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது. மரணதண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் வளரும் நாடுகளில் இருந்து வந்து தொழில் புரிபவர்களே என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


சவுதி அரேபியாவில் இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான வங்காளதேசிகள் தொழில் புரிகின்றனர்.


மூலம் தொகு