சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம்

செவ்வாய், மார்ச்சு 16, 2010

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஆரம்பமானது.


மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறும் இன்றைய முதல் அமர்வின்போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக விசாரணை இடம்பெற்றது. முதற்கட்ட விசாரணையின் பின்னர் இன்றைய நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை குறித்த விசாரணைக்கு வேறொரு இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நாளை நடைபெறும்.


இக்குற்றச்சாட்டுக்கள் தம்மை அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையே என்றும், தம்மை ஏப்ரல் பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்காகவே இந்நடவடிக்கை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


இவ்விசாரணைக்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.


மிகவும் இரகசியமான முறையில் இடம்பெறும் இவ்விசாரணை சரத் பொன்சேகாவிலும் இளநிலை அதிகாரிகளினால் நடத்தப்படுகிறது என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலாண்ட் தெரிவித்தார்.


குற்றச்சாட்டுக்கள் எதுவும் விவரமாக பொது மக்களௌக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட 35 பேர் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பொன்சேகா தனக்காக வாதாட தனது வழக்கறிஞர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தலாம் எனவும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் பொன்சேகா முறையிடலாம் எனவும் இராணுவப் பேச்சாளர் பிபிசி நிருபருக்குத் தெரிவித்தார்.


சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றங்கள் சாதாரன நீதிமன்றம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் தொகு