சப்பானிய ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட துறைமுகக் களம் அமெரிக்காவில் கரையொதுங்கியது

வியாழன், சூன் 7, 2012

2011 மார்ச் மாதத்தில் சப்பானில் இடம்பெற்ற பெரும் ஆழிப்பேரலையில் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்ட பெரும் துறைமுகக் களம் ஒன்று 8,050 கிமீ தூரத்தில் அமெரிக்காவின் வடமேற்கே ஓரிகன் மாநிலத்தில் கரையொதுங்கியுள்ளது.


கொங்கிறீட்டு, உலோகம், மற்றும் இரப்பர் டயர்களால் அமைக்கப்பட்ட 165-தொன் எடையுள்ளதும், 21 மீட்டர் நீளமானதுமான இந்த மாபெரும் களம் ஓரிகனின் போர்ட்லாந்து கரையை வந்தடைந்துள்ளது.


இக்களத்தில் கதிரியக்கத்தின் தாக்கம் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கும் அறிவியலாளர்கள், இக்களத்தில் சப்பானின் கடல்வாழ் உயிரினங்கள் பல இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர். இக்களத்தை என்ன செய்வது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதே வேளையில் காவல்துறையினர் இந்தக்களத்திற்குப் பாதுகாப்பளித்து வருகின்றனர்.


சப்பானின் வடக்கே மிசாவா துறைமுகத்தைச் சேர்ந்ததாக இக்களத்தில் காணப்பட்டுள்ள இலச்சினை தெரிவிக்கிறது. இத்துறைமுகத்தில் இருந்து மேலும் இரண்டு களங்கள் காணாமல் போயுள்ளன.


2011 சுனாமியால் 20 மில்லியன் தொன் எடையுள்ள பொருட்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சப்பானிய அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். 16,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு