சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர்

This is the stable version, checked on 19 சனவரி 2011. Template changes await review.

சனி, சனவரி 15, 2011

தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் சபரிமலையில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றையடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


2010 சனவரியில் இடம்பெற்ற மகர ஒளி விழா

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மகர ஒளி தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாடிழந்த வாகனம் ஒன்று புகுந்ததாகவும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பலரும் சிதறி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 90 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலையில் நேற்று நடந்த மகரசோதி பெருவிழாவின் கடைசி நாள் நிகழ்வில் ஒளியைப் பார்க்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். மகர ஒளியைப் பார்த்துவிட்டு இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு, உப்புப்பாறை வழியே பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு 10.30 மணிக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்து, 60 அடி பள்ளத்தில் விழுந்தது.


வாகன நெரிசலிலும், அதன் பின்னர் எற்பட்ட கூட்ட நெரிசலிலும் பலர் சிக்கினர். 100 பேர் வரையில் இதில் உயிரிழந்திருக்கலாம் என கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளதாக கேரள கோயில் அலுவல்கள் அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி கூறினார்.


விபத்தும் நெரிசலும் நடந்த இடம் எளிதில் அணுகமுடியாத காட்டுப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும், தொலைத்தொடர்புத்துறையின் தகவல் தொழில்நுட்பம் எட்டாத இடமாக அது இருப்பதாலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மூலம்