இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு

வெள்ளி, பெப்பிரவரி 17, 2012

கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து 14 கடல்மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தாலி நாட்டு தூதர் கியாகோமோ மாண்டிஃபோர்ட்டை அழைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது.


இத்தாலியக் கப்பலின் பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்கக் காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பலில் வந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த 48 வயதான் மீனவர் ஜெலெஸ்டின் மற்றும் 19 வயதான அஜித் பிங்க் ஆகியோர் உயிரிழந்தனர். கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்து அதன் அதிகாரிகளிடம் விசாரணை நட்த்திவருகின்றனர். மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து, பதட்டத்தில் அப்படகின் மீது சுட்டுவிட்டதாக கப்பலைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். இத்தாலியத் தூதரோ இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏதோ நிகழ்ந்ததாகக் கூறியிருக்கிறார். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இந்திய மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.


நேற்று பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.


சோமாலியக் கொள்ளைக்காரர்கள் தற்போது இந்தியப் பெருங்கடலினுள்ளும் ஊடுருவியுள்ளனர் என இந்தியா முதலில் எச்சரித்திருந்தது. சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களைக் கண்காணிக்கவென இந்தியா போர்க்கப்பல் ஒன்றை ஏற்கனவே சோமாலியக் கடற்பகுதியில் தயார் நிலையில் வைத்துள்ளது.


இறந்த இரு தமிழக மீனவர்களுக்கும் தலா 50,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.


மூலம் தொகு