சனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல் இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூன் 26, 2011

என்சலடசு என்ற சனிக் கோளின் நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை நாசாவின் கசினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி கண்டுபிடித்துள்ளது.


2009 ஆம் ஆண்டில் நாசாவின் கசினி விண்கலம் என்சலடசு நிலவை அண்மித்த போது எடுத்த படம்

என்சலடசு வெளியேற்றிய பனிக்கட்டித் துண்டுகளை ஆராய்ந்த போது அதில் பெருமளவு உப்புத் தன்மை காணப்பட்டுள்ளது. இவ்வாய்வு முடிவுகள் இவ்வாரம் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


நிலவின் மேற்பரப்புக்குக் கிட்டவாக சோடியம், மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் செறிவு ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்பட்டுள்ளதாக கசினியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இச்செறிவு பெருங்கடல் ஒன்றில் காணப்படும் உப்புச் செறிவை ஒத்ததாக இருந்தது. வெளியேற்றப்பட்ட பனி மற்றும் நீர் ஆவி உப்பு-நீர் சேர்வையில் இருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. நீர் உறையும் போது, உப்பு வேறாக்கப்பட்டு, தூய நீர் கொண்ட பனிக்கட்டி எஞ்சுகிறது.


அமெரிக்காவின் அரிசோனாவின் டக்சனில் கோளியல் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குழு இவ்வாய்வை மேற்கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் கசினி விண்கலம் என்சலடசை அண்மித்த போது சேகரித்த பனிக்கட்டிகள் ஆய்வு செய்யப்பட்டன.


"என்சலடசு சூடான நீர் மற்றும் கனிம வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது. இவை உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படையாகும்," என நாசா அறிவியலாளர் டெனிஸ் மாட்சன் 2008 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு