சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, திசம்பர் 20, 2009


சனிக் கோளின் நிலவான "டைட்டானில்" திரவம் இருப்பதை நாசாவின் கசினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி முதற் தடவையாக படம் பிடித்தது. பூமியை விட வேறு ஓர் உலகில் திரவமிருப்பது படம் பிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.


வழவழப்பான தெறிப்பைக் காட்டும் பிரபலமான புகைப்படம்

மிகவும் வழவழப்பான திரவ மேற்பரப்பொன்றில் தெறித்து வரும் கதிர்களை இவ்விண்கலம் படம் பிடித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு கசினி விண்கலம் இங்கு வந்ததில் இருந்து இவ்விடத்தைப் படம் பிடிக்க முயன்று வந்தது. 2008 ஆம் ஆண்டில் அகச்சிவப்பு (infrared) தரவுகளைக் கொண்டு திரவ மெத்தேன் ஆறுகள் இங்கு இருப்பதை இது உறுதி செய்தது. டைட்டானின் அநேகமான ஆறுகள் அதன் வடக்கிலேயே உள்ளன.


டைட்டானின் காற்று மண்டலம் பூமியைப் போன்றே நைதரசன் அங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஆனாலும் டைட்டானின் பனிப்பிரதேசங்களில் வெப்பநிலை -180 °C ஆகும். இது அங்கு உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கிறது. இருந்தாலும், திரவம் அங்கு இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகளை அதிகரிக்கின்றது.


படத்தில் காணப்பட்ட ஆறு 400,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. படகு ஒன்றை இந்த ஆற்றில் இறக்குவதற்கு அறிவியலாளர் குழு ஒன்று நாசாவுக்குப் பரிந்துரைத்துள்ளது. "டைம்" எனப்படும் இப்படகு 2016 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டால், 2023 ஆம் ஆண்டிலேயே டைட்டானைச் சென்றடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளாது.

மூலம்

தொகு