கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூன் 12, 2011

போர்ச்சூழல் காரணமாக கடந்த 30 ஆண்டு காலம் இடை நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1895 இல் தூத்துக்குடி துறைமுகம்

தமிழ்நாட்டின் தெற்கே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா- இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்திருந்தன. முன்னர் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும், தலைமன்னாருக்கும் இரமேசுவரத்துக்குமிடையிலுமாக இரு சேவைகள் இடம்பெற்றுவந்தன. 1982 இல் உள்நாட்டுப் போர் காரணமாக இவை இடைநிறுத்தப்பட்டிருந்தன.


எம். வி. ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பெயரைக்கொண்ட கப்பல் கொழும்பை வந்தடைய சுமார் 14 மணித்தியாலங்கள் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கப்பலில் 1200 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 4 ஆயிரம் தொன் எடையுள்ள சரக்குகளை ஏற்ற முடியும். 325 அறைகளைக் கொண்ட இக்கப்பலில் பயணிகளுக்குத் தேவையான உணவு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளது.


இக்கப்பலில் ஒரு வழிப் பயணத்துக்கு குறைந்தபட்சமாக 49 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன் முதலில் வாரம் இருமுறை இக்கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும் என்றும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார்.


இவ்விரு நகரங்கள் இடையே முதல் முறையாக 1907 ஆம் ஆண்டு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்புக்கு தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்பைச் சென்றடையும். கொழும்பிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திரும்பும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும்.


மூலம்

தொகு