கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, அக்டோபர் 30, 2009

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் நேற்று மாலை தமிழ் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார். இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப்பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுப்பகல் வீதியில் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.


இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. புகையிரதம் ஒன்றில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.


பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த போதும் அதனை தடுத்த சிலர் அவரை கட்டைகளால் தாக்கினர்.


இந்த சம்பவம் நீடித்துக்கொண்டிருக்க கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது அவர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு மரணமானார்.


இவரது சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்ந்துக்கொண்டிருந்த போதும் பொலிஸார் இதனை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த ஒருவரினால் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


உயிரிழந்த இளைஞன் இரத்மலானையைச் சேர்ந்த சிவகுமார் (26) என அவரது தமையன் அடையாளம் காட்டினார். இவர் மனநோயாளர் என்றும் சொல்லப்படுகிறது.

மூலம்

தொகு