கொழும்பில் லங்காஈநியூஸ் இணையத்தள அலுவலகம் தீவைத்து எரிப்பு
திங்கள், சனவரி 31, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை அரசை விமர்சிக்கும் லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காஈநியூஸ் தளத்தின் கொழும்புபேஜ் என்ற இணையப்பத்திரிகையின் தகவல் படி, கொழும்பின் புறநகர்ப்பகுதியான மாலபேயில் தகம் மாவத்தையில் உள்ள அவர்களது அலுவலகத்தினுள் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இப்போது கட்டடத்தினுள் உள்ள அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகி விட்டன," என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 அரசுத்தலைவர் தேர்தலில் தாங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து எழுதத் தொடங்கியதை அடுத்து தாம் பல அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானதாக லங்காஈநியூஸ் சிங்கள மொழி இணையத்தளம் எழுதியுள்ளது. கடந்த ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலுக்குப் பின்னர் இவ்விணையத்தளத்தின் செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போயுள்ளார். இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்விணையத்தளம் வெளியிட்டுவரும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளால் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இன்றைய சம்பவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என இணையத்தள ஆசிரியர் பெனட் ரூபசிங்க அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுக்களை அரசு மறுத்துள்ளது. “எவ்வித ஆதாரமும் இல்லாமல் எம்மைக் குற்றம் சாட்ட முடியாது," என ஊடகப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல கூறினார்.
அரசுத்தலைவர் ராசபக்ச இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக த இந்து செய்திப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மூலம்
தொகு- Website office attacked in Sri Lanka; Rajapaksa orders probe, த இந்து, சனவரி 31, 2011
- MR orders urgent inquiry, டெய்லிமிரர், சனவரி 31, 2011