கொழும்பில் தனியார் ஊடக நிலையம் தாக்கப்பட்டது

வெள்ளி, சூலை 30, 2010


இலங்கைத் தலைநகர் கொழும்பில் யூனியன் பிளேசில் சியத்த என்ற தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தை இனந்தெரியாத கும்பல் ஒன்று எரிகுண்டு வீசி தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை இந்நிறுவனம் நடத்தி வருகிறது.


ஆயுதம் ஏந்தி முகமூடி அணிந்திருந்த 12 பேர் நகர மையத்தில் உள்ள சியத்த அலுவலகத்துக்குள் நுழைந்து குண்டுகளை வீசியதோடு, ஒளிபரப்புக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சுமார் 40 கணினிகள், குளிரூட்டிகள், இலத்திரனியல் சாதனங்கள் தீக்குள் அகப்பட்டு சேதமடைந்ததுடன், சியத்த தொலைக்காட்சியின் பிரதான கட்டுப்பாட்டு அறை சேதமடைந்ததால் தற்போது ஒளிபரப்புக்களை மேற்கொள்ளமுடியாதுள்ளதாக வொய்ஸ் எவ். ஏசியா நிறுவனத்தின் தலைவர் ரொஷான் காரியப்பெரும தெரிவித்தார்.


அங்கிருந்த பணியாளர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மண்டியிடச் செய்ததாகவும், இரண்டு ஊழியர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ள சியத்த தொலைக்காட்சியின் உரிமையாளர் முன்பு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் கடந்த அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்கினார் என்று செய்திகள் வெளியானதை அடுத்து, சில மாதங்கள் முன்பு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.


சியத்த ஒளிபரப்புகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலானவையாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பது இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.


தீவைப்புச் சம்பவம் குறித்து விசேட புலனாய்வுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் மகிந்த பாலசூரியவை அரசாங்கம் பணித்துள்ளது.


இலங்கையில் 18 மாதங்களுக்கு முன்பு மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் இதே வகையில் தாக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் நாடுகளில் இலங்கை நான்காம் நிலையில் உள்ளது என ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் மனித உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம் தொகு