கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் தீக்குளித்து இறப்பு

செவ்வாய், சூலை 27, 2010

கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவின் முன்பாக நேற்று மாலை தீக்குளித்த நபர் தீக்காயங்கள் காரணமாக இன்று காலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை மாலை 5:10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்பவரே உடலின் 90 சதவீதமான பாகம் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், களுபோவிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் அக்கட்சியின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையக் கோரியுமே அவர் தீக்குளித்துக் கொண்டதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா தெரிவித்தார்.


"அல்கம காலையில் என்னுடன் தொடர்பு கொண்டார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து அவர் பெரும் கவலை கொண்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். ஒற்றுமையை அவர் என்னிடம் வலியுறுத்தினார். இதனாலேயே அவர் தீக்குளித்துக் கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்," என்றார் கரு ஜெயசூரியா.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம் தொகு