கொலம்பியாவுடனான சகல உறவுகளையும் வெனிசுவேலா துண்டித்துக் கொண்டது

செவ்வாய், சூலை 27, 2010

தனது அயல் நாடான கொலம்பியாவுடனான சகல இராசதந்திரத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் ஊகோ சாவெஸ் அறிவித்தார்.


72 மணி நேரத்திற்குள் கொலம்பிய இராசதந்திரிகள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.


கொலம்பியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்க எடுத்த வெனிசுவேலாவின் முடிவை அமெரிக்கா குறை கூறியுள்ளது.


முன்னதாக வாசிங்டனில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு ஒன்றில் கொலம்பியத் தூதுவர் பேசும் போது, "சாவெசின் அரசாங்கம் "பார்க்" தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது என்றும், வெனிசுவேலாவில் அவர்கள் நிலைகொன்டு தமது நாட்டுக்கெதிராகச் செயற்படுவதாகவும்," குற்றம் சாட்டினார். அடுத்த 30 நாட்களுக்குள் வெனிசுவேலாவில் பார்க் தீவிரவாதிகளின் நிலையை விசாரிக்க பன்னாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


இதை நிராகரித்த வெனிசுவேலா அரசுத்தலைவர் ஊகோ சாவெஸ், "அமெரிக்காவே இவ்வாறான வீண் சந்தேகங்களை பிராந்திய நாடுகளுக்கிடையில் உண்டு பண்ணுகின்றது," என்றார்.


"வெனிசுவேலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாரென," வெனிசூலா ஜனாதிபதி ஊகோ சாவெஸ் தெரிவித்தார்.

மூலம் தொகு