கொலம்பியாவின் ஃபார்க் போராளிகளின் அரசியல் கட்சி சட்டபூர்வமாக்கப்பட்டது

புதன், சூலை 10, 2013

கொலம்பியாவின் ஃபார்க் போராளிகளுடன் தொடர்புடைய அரசியல் கட்சி அந்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து, அடுத்த ஆண்டுத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1985 ஆம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் பெலிசாரியோ பெட்டன்கோர்ட் இற்கும் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேசப்பற்றுள்ள ஒன்றியம் என்ற அரசியல் கட்சி 2002 ஆம் ஆண்டில் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் போனதை அடுத்து தடை செய்யப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கிய சில ஆயுதக்குழுக்களினால் இக்கட்சி அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்ததாகக் கூறப்பட்டு அக்கட்சி அதிகாரபூர்வமான அரசியல் கட்சியாக நீதிமன்றத்தினால் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படை எனப்படும் ஃபார்க் இயக்கப் போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை அடுத்தே இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே கியூபாவில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.


தேசப்பற்றுள்ள ஒன்றியத்தின் சுமார் 3,000 உறுப்பினர்கள் துணை-இராணுவக் குழுக்களினாலும், போதைப்பொருள் கடத்தல் குழுக்களினாலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களும் அடங்குவர். 2011 நவம்பரில் ஃபார்க் குழுவின் தலைவர் அல்ஃபோன்சோ கானோ கொல்லப்பட்டார்.


1960களில் இருந்து சுமார் 600,000 பேர் உள்நாட்டுப் போரின் போது உயிரிழதனர். மூன்று மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர். ஃபார்க் போராளிக் குழுவில் தற்போது 8,000 பேராளிகள் வரை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 16,000 ஆக இருந்தது.


மூலம் தொகு