கொசோவோ விடுதலைப் பிரகடனத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்து ஐநா நீதிமன்றத்தில் விசாரணை

புதன், திசம்பர் 2, 2009


சேர்பியாவிலிருந்து பிரிந்து 2008 ஆம் ஆண்டில் கொசோவோ மேற்கொண்ட விடுதலைப் பிரகடனம் சட்ட ரீதியானதா என்பதை ஆராய்வதற்கான விசாரணைகள் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளன. சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்தமை பன்னாட்டு சட்ட விதிகளுக்கு அமைவானதா என்பது குறித்த விசாரணையை ஐநாவின் நீதிமன்றமொன்று மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.


கொசோவோவின் விடுதலைப் பிரகடனத்தை 63 நாடுகள் அங்கீகரித்துள்ள போதும் இவ் வழக்கில் அதனை நிராகரிக்குமாறு சேர்பியா கோரியுள்ளது. இவ் வழக்கின் தீர்ப்பு வெளிவர பல மாதங்களாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்தின் ஹேக் நகரை தளமாகக் கொண்டியங்கும் இந்த நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள இது குறித்த விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.


2008 பெப்ரவரியில் சேர்பியாவிலிருந்து பிரிந்து ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை கொசோவோ மேற்கொண்டது. தமது சட்டரீதியான தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொன்றையும் தாம் செய்யப்போவதாக சேர்பிய ஜனாதிபதி பொறிஸ் ராடிக் தெரிவித்துள்ளார்.


மேலும் இவ் விசாரணைகள் கொசோவோவுடனான புதிய பேச்சுகளுக்கு வழிவகுக்குமெனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பில் பேசுவதற்கு எதுவுமில்லையென கொசோவோ கருதுவதே பிரச்சினையை உருவாக்குமென செய்தியாளர்கள் கூறுகின்றனர். தமது அதிகார எல்லைகள் தொடர்பில் இதுபோன்ற சவால்களை எதிர்நோக்கும் பல நாடுகள் இவ் வழக்கை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த வழக்கில் எவராலும் வெல்ல முடியாத வாதத்தை கொசோவோ முன்வைக்குமென கொசோவோ ஜனாதிபதி பட்மிர் செஜ்டியு கூறியதாக செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

மூலம்

தொகு