கொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், மே 11, 2010

கொசோவோ-அல்பேனியர்களினது என நம்பப்படும் பெரும் புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 உடல்கள் இருக்கக் காணப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கொசொவோவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் காவல்துறையினர் தந்த தகவலையடுத்து சேர்பியா, பரிசோதனையாளர்கள் சிலரை அங்கு அனுப்பி வைத்துள்ளது.


1998, மற்றும் 1999 காலப்பகுதியில் சேர்பியா - அல்பேனியப் படைகளுக்கிடையில் கொசோவாவில் இடம்பெற்ற மோதல்களின் போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.


இந்தப் புதைகுழி சேர்பியத் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 180 கிலோமீடர் தெற்கே ராஸ்கா நகரில், கொசொவோ எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதைகுழி பற்றிய வதந்தி இரண்டாண்டுகளுக்கு முன்னர் சேர்பியாவில் பரவியிருந்தது. ஆனாலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.


இப்புதைகுழி கட்டடம் ஒன்றின் அடியில் உள்ளது. புதைகுழியை மறைக்கவே இக்கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இவ்வாறான புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டிலும் 800 அல்பேனிய படையினரின் உடலங்கள், சேர்பியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


கொசோவொ போரின் போது 11,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அல்பேனியர்கள், குறைந்தது 2,300 பேர் சேர்பியர்கள் ஆவர்.

மூலம்

தொகு