கிழக்குத் திமோர் அதிபர் படுகொலை முயற்சி வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், மார்ச்சு 4, 2010


கிழக்குத் திமோரில் உள்ள நீதிமன்றமொன்று, 2008 ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசுத்தலைவரையும், பிரதமரையும் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் 23 கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகளாக முடிவு செய்துள்ளது.


குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளும் காவல்துறை அதிகாரிகளுமாவர். இவர்களுக்கு 16 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோட்டா, தலைநகர் டிலியிலுள்ள அவரது வீட்டுக்கு முன்பாக வைத்து சுடப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.


அதே தினத்தில் பிரதமர் க்ஷானா னா குஸ்மாவோ பயணித்த வாகனத் தொடரணி தாக்குதலுக்குள்ளானபோது, அவரும் காயங்களுடன் உயிர் தப்பினார்.


குற்றவாளிகளாகக் காணப்பட்டோரை விட மேலும் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இவரக்ளில் அஞலீட்டா பிரெஸ் என்ற ஆத்திரேலியப் பெண்ணும் அடங்குவார். இவர் கொலைமுயற்சியின் போது கொல்லப்பட்ட போராளித் தலைவர் ஆல்பிரெடோ ரெய்னாடோ என்பவரின் சிநேகிதி ஆவார்.


குற்றவாளிகளாகக் காணப்பட்டோரில் பெரும்பான்மையானோர் முன்னாள் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஆவர். இவர்கள் 2006 ஆம் ஆண்டில் இராணுவத்தினரிடையே இடம்பெற்ற கிளர்ச்சியின் போது போராளிகளானோர். இக்கிளர்ச்சியின் போது பலர் கொல்லப்பட்டனர். ஆட்சியும் கவிழ்ந்தது.


ரெய்னாடோவின் மறைவிற்குப் பின்னர் போராளிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கஸ்தாவோ சால்சிகா என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் அரசிடம் சரணடைந்தார். இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மூலம்

தொகு