காசாவில் இசுரேலும், அமாசு இயக்கமும் போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், நவம்பர் 22, 2012

காசாக் கரையில் இசுரேலுக்கும் காசாப் பகுதியை ஆளும் இசுலாமிய அமாசு இயக்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு நேற்று எட்டப்பட்டது.


உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து காசாவில் நேற்று புதன்கிழமை இரவு பொதுமக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரித்து மகிழ்ந்தனர். காசாவில் இருந்து மூன்று ராக்கெட்டுகள் இசுரேலை நோக்கி ஏவப்பட்டதாக இசுரேலிய வானொலி தெரிவித்துள்ளது. ஆனாலும் இசுரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அது தெரிவித்தது.


எகிப்தின் மத்தியத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டை இரு தரப்பும் மதித்து நடக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.


கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்று வந்த மோதல்களில் குறைந்தது 150 பாலத்தீனர்களும், ஐந்து இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இசுரேலின் ஏவுகணைத் தாக்குதல்களில் பல கட்டடங்கள், மற்றும் வீடுகள் சேதமடைந்தன.


நாடுகடந்த நிலையில் வாழும் அமாசின் அரசியல் தலைவர் காலிது மெசால் கருத்துத் தெரிவிக்கையில், இசுரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது, அமாசின் முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். காசாவுக்கு வரும் பாதைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்றார் காலிது மெசால்.


கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அமாசு இயக்கத்தினர் முதற்தடவையாக டெல் அவீவ், மற்றும் எருசலேம் நகர்களைத் தாக்கக் கூடிய நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.


நேற்றைய தினம், டெல் அவீவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.


மூலம்

தொகு