காசா மீதான இசுரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, நவம்பர் 16, 2012

கடந்த புதன்கிழமை முதல் பாலத்தீனம் மீது இசுரேல் நடத்திய வான் தாக்குதல்கள் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் என காசா அமைச்சர் அஷ்ரப் அல்-கீத்ரா தெரிவித்துள்ளார்.


இன்று வெள்ளிக்கிழமை பெயிட் அனூன் நகரில் வாகனம் ஒன்றின் மீது இசுரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதில் 10, 14, 16 வயது பாலத்தீனியச் சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.


காசாவின் ஆளும் அமாசு அமைப்பின் இராணுவப் பிரிவான இசதின் அல் கசாம் படையின் தளபதி அகமது அல்-சபரி என்பவர் புதன்கிழமை அன்று இசுரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே அங்கு இரு தரப்பு மோதல் வலுவடைந்துள்ளது. இத்தாக்குதல் குறித்து இசுரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது.


நேற்றிரவு மட்டும் இசுரேல் காசா மீது 130 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு அமாசு போராளிகள் 11 ஏவுகணைத் தாக்குதல்களை இசுரேல் மீது நடத்தியுள்ளனர். அமாசு போராளிகளின் தாக்குதலில் தெற்கு இசுரேலில் மூன்று இசுரேலியர்கள் கொல்லப்பட்டனர்.


இதற்கிடையில், காசா-இசுரேல் மோதலை அடுத்து காசாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எகிப்தியப் பிரதமர் இசாம் காண்டில், இசுரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மூன்று மணி நேரக் குறுகிய பயணத்தில் அவர் பாலத்தீனிய அரசியல்வாதிகளைச் சந்தித்து உரையாடினார். இசுரேலியத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் குரல் கொடுத்தார். இவரது முசுலிம் சகோதரத்துவக் கட்சி எகிப்தின் ஆளும் கட்சியாக உள்ளது. இது அமாஸ் இயக்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது.


மூலம்

தொகு