கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 3, 2014

கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் காவல்துறையினரால் விடுவிக்கப்படாததை அடுத்து உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். சிறுவனின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மூன்று இசுரேலியச் சிறுவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே பாலத்தீன சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முகம்மது அபு காதிர் என்ற 17 வயது பாலத்தீன சிறுவனின் உடல் நேற்று புதன்கிழமை எருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிறுவன் பாலத்தீனர்கள் அதிகம் வாழும் கிழக்கு எருசலேமின் சுஃபாத் நகரில் வாகனம் ஒன்றில் நேற்று பலவந்தமாக ஏற்றப்பட்டுக் கடத்தப்பட்டான் என செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று அதிகாலையில் இசுரேலிய வான் படையினர் காசாவில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10 பத்து பாலத்தீனர்கள் காயமடைந்தனர். பாலத்தீனப் போராளிகள் இசுரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்கள் நடத்தியதாலேயே இசுரேல் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


யூதக் குடியேற்றக்காரர்களே சிறுவனைக் கடத்திச் சென்று கொன்றுள்ளதாக பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் தெரிவித்தார். இப்படுகொலையை இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு வன்மையாகக் கண்டித்துள்ளார். கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


இரண்டரை வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட யூத இன மதப்பள்ளி மாணவர்கள் மூவரின் இறந்த உடல்கள் கடந்த திங்களன்று எப்ரோன் நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த இசுரேலிய இளைஞர்கள் கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் வைத்து காணாமல் போயினர். இவர்களைத் தேடி மேற்குக் கரையில் இசுரேல் இராணுவம் தீவிர சோதனை நடத்தியிருந்தது. இவர்களது இறுதிக் கிரியைகள் செவ்வாய் அன்று நடைபெற்றன.


மூலம்

தொகு