கழிவு நீரில் இருந்து அமெரிக்க ஆய்வாளர்கள் மின்சாரம் தயாரிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, மார்ச்சு 4, 2012

கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் முன்னோடிக் கருவி ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இக்கருவி மூலம் பயன்படுத்தப்படும் கழிவு நீரை தூய நீராக்கவும் முடியும்.


கழிவு நீரை நன்னீராக்கவும், வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் வளரும் நாடுகளில் இம்முறையைப் பயன்படுத்த முடியும் என அவர்கள் கூறுகின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று சயன்ஸ் அறிவியலிதழில் வெளிவந்துள்ளது.


நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆறுகளில் இருந்து நன்னீர் கடலின் உப்புத் தண்ணீருடன் கலக்கும் கரையோரப் பகுதிகள் சிலவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேர்மாறான மின்வழிக் கூழ்மைப் பிரிகை (RED) மூலம் நன்னீரும், கடல் நீரும் சவ்வுகள் இடையில் வைக்கப்பட்டு பிரிக்கப்பட்டு மின்வேதியியல் மின்னேற்றம் பெறப்படுகிறது. இதே தொழிநுட்பத்தைப் நோர்வே நாட்டு நிறுவனம் ஒன்றும் பயன்படுத்தி வருகிறது. இம்முறையில் பெருமளவு சவ்வுகள் (membranes) பயன்படுத்தப்பட வேண்டி உள்ளதாகவும், அத்துடன் மின்னுற்பத்தி நிலையங்களை கடலை ஒட்டியே நிறுவ வேண்டியுள்ளதாகவும் பென்சில்வேனிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


ஆனால், இத்தொழில்நுட்பத்துடன் நுண்ணுயிரி எரிபொருள் கலங்கள் (MFCகள்) பயன்படுத்தப்படின், சவ்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் மின்னுற்பத்தி பெருமளவில் கிடைக்கும் என்றும் கழிவு நீர் போன்ற கரிமப் பொருட்கள் நுண்ணுயிரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.


உப்பு நீருக்குப் பதிலாக இத்தொழில்நுட்பத்தில் அமோனியம் இருகார்பனேட்டுக் கரைசல் பயன்படுத்தப்பட முடியும். இதனால் நாட்டின் எந்த இடத்திலும் இதனை நிறுவ முடியும். அமோனியம் இருகார்பனேட்டுக் கரைசல் உள்ளூர்த் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு வெப்பம் மூலம் தொடர்ச்சியாக மறுசுழற்சி முறை மூலம் பயன்படுத்தப்பட முடியும்.


மூலம்

தொகு