கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தான் இலங்கையில் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, சனவரி 17, 2014

கனடாவின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தனது இலங்கை விஜயத்தின்போது தன்னை இலங்கை அரசின் உளவாளிகள் பின்தொடர்ந்ததாகவும், விசாரணைகளை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் இலங்கையில் பிறந்தவர், அவர் குடும்பம் சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறியது. இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில், தான் சிறுவயதில் வாழ்க்கையை நடத்திய இடத்தைப் பார்வையிடவே வந்ததாகவும், தான் உத்தியோகபூர்வமான விஜயத்தை நிகழ்த்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராதிகா சிற்சபேசன்

கடந்தவருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி ராதிகா சிற்சபேசன் இலங்கை விஜயத்தை நிகழ்த்தியிருந்தார். இதன்போது தொடர்ச்சியாக இலங்கை அரசின் உளவாளிகளால் தான் தொடரப்பட்டதாகவும், தனியாக வைத்து விசாரணைகள் செய்யப்பட்டதாகவும் ராதிகா அறிவித்துள்ளார். குறிப்பாக விசாரணையின் போது அதிகாரிகள் தான் சென்ற இடங்களின் பட்டியலை கையில் வைத்திருந்ததாகவும், அது தொடர்பாகவும் தான் சந்தித்த நபர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒரு அனாதைகள் இல்லத்தைப் பார்வையிடச் சென்றபோது அங்கு வந்த அரச அதிகாரிகள் சிலர் தம்மிடம் ராதிகாவைக் கைதுசெய்ய அனுமதி இருப்பதாக மிரட்டியதாகவும் ராதிகா தெரிவித்தார். மேலும் பிரைச்சனைகளைத் தவிர்க்க தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியதுடன் கனடாவிற்கான உயர்தானிகரைத் தொடர்புகொண்டு நிலைமையை ஆராய்ந்ததாகவும் ராதிகா தெரிவித்தார். இந்த நிகழ்வுகளானது உலகமெங்கும் மனித உரிமைக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற தன் கொள்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக இலங்கையில் உள்ள தன் சகோதர சகோதரிகளுக்காக உரிமைக் குரல் கொடுப்பேன் என்றும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார்.


ஆயினும் இவரது கருத்துக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. ராதிகா சிற்சபேசனை இலங்கை அரசு கௌரவமாகவே நடத்தியது, இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தவே இவ்வாறு கருத்துக்களை அவர் வெளியிடுவதாக இலங்கை உயர்தானிகர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.



மூலம்

தொகு