ஒரு பாலினத் தம்பதிகள் பிள்ளைகளைத் தத்தெடுக்க நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

செப்டம்பர் 3, 2010

ஒரு பாலினத் தம்பதிகள் பிள்ளைகளைத் தத்தெடுக்க வழி செய்யும் மசோதா ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இம்மசோதாவிற்கு ஆதரவாக 46 பேரும் எதிர்த்து 44 பெரும் வாக்களித்தனர்.


சிட்னியில் மக்குவாரி வீதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம்

கிறித்தவத் தேவாலயங்கள் மூலமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று உத்தேச சட்டமூலத்தில் மாற்றம் கொண்டு வரப்படுதல் வேண்டும் என எதிர்ப்புக் கிளம்பியதால் முன்னர் ஒரு தடவை இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது. இப்போது நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் (தொழிற்கட்சி), மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் (தாராளவாதக் கட்சி) ஆகியோரின் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


இம்மசோதாவை நாடாளுமன்றத்தி, சமர்ப்பித்து உரியாற்றிய முதல்வர் கிறிஸ்டீனா கென்னலி, "தாய் என்ற அந்தஸ்தில் எனது அனுபவங்களையும், நாடாளுமன்றவாதி என்ற நிலையில் எனது பொறுப்பு, கிறித்தவர் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை போன்றவற்றில் எனது மனச்சாட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இம்மசோதாவை உங்கள் முன் வைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டார்.


எதிர்க்கட்சித் தலைவர் ஓ’ஃபாரெல் உரையாற்றுகையில், "பாலினம், பாற்தன்மை, நம்பிக்கை, பின்புலம் போன்றவற்றில் எமது மக்கள் ஒதுக்கப்படக்கூடாது என நான் நம்புகிறேன்," என்றார்.


இம்மசோதா சட்டமூலமாகக் கொண்டுவரப்படுவதற்கு மாநில ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் மாநில மேலவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட வேண்டும்.


இதே போன்ற மசோதா ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய தலைநகர்ப் பிராந்தியம் ஆகிய மாநிலங்களில் சட்டமாக்கப்பட்டுள்ளன.

மூலம் தொகு