ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையை முறியடித்தது மலேசியக் கடற்படை
ஞாயிறு, சனவரி 23, 2011
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
ஏடன் வளைகுடா அருகே தமது சரக்குக் கப்பல் ஒன்றை 23 பணியாளர்களுடன் கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
மலேசியக் கொடியுடன் சென்ற எம்டி புங் லோரல் என்ற வேதிப் பொருட்களை எடுத்துச் சென்ற சரக்குக் கப்பலை ஓமானுக்கு 555 கிமீ கிழக்கே வெள்ளிக்கிழமை அன்று கடத்திய கொள்ளைக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் மூன்று கொள்ளையர்கள் காயமடைந்தனர். கப்பலின் மாலுமிகளிடம் இருந்து வந்த அபாயச் ச்மிக்கையை அடுத்தே தமது கமாண்டோக்கள் தாக்குதலில் இறங்கியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையர்களை கோலாலம்பூரில் வைத்து வழக்குத் தொடுப்பதா என தற்போது மலேசிய அரசு யோசித்து வருகிறது.
"அவர்களை இங்கு கொண்டு வருவதா அல்லது வேறு வழிகளில் விசாரிப்பதா என்பது குறித்து நாம் விரைவில் முடிவெடுப்போம்," என மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்தார். "எமது கடற்படையினர் குறித்து நாம் பெருமைப்படுகிறோம்" என அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டில் மட்டும் 1,181 பேர் சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டனர். 53 கப்பல்கள் கடத்தப்பட்டன, இவற்றில் 49 சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டன. எட்டு மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அரபிக் கடலில் இடம்பெற்ற இன்னும் ஒரு மோதலில் தென் கொரியக் கப்பல் ஒன்றை 21 பேருடன் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி ஒன்றை தென் கொரியக் கடற்படையினர் முறியடித்துள்ளனர்.
மூலம்
தொகு- Malaysia navy foils ship hijack attempt, seizes pirates, பிபிசி, சனவரி 22, 2011
- Malaysia navy frees hijacked tanker, அல் ஜசீரா, சனவரி 22, 2011
- Korea rescues hijacked ship crew, அல்ஜசீரா, சனவரி 21, 2011